Saturday, August 22, 2020

ஒன்று

 புன்னகை - அழகு!

சிரித்த முகம் - பேரழகு!


சிரிப்பு மட்டும் தான் என்றால்? 


விட்டுக் கொடுத்தோர் 

கெட்டுப் போவதில்லை!


எதைத் தான் வைத்துக்கொள்வது?


சார்ந்தோருக்கும் - உடன் 

சேர்ந்தோருக்கும்  - செவி சாய்க்கலாம்!


சுயம் - சாய்ந்திடலாமா? 


தாய்க்கு -ஒன்று 

தகப்பனுக்கு - ஒன்று 

மனையாளுக்கு - ஒன்று 

மகளுக்கு - ஒன்று 

நண்பனுக்கு - ஒன்று 

அதிகாரிக்கு - ஒன்று 

திரும்பிய திசையெங்கும் - ஒன்று

என எண்ணிலடங்கா  அந்த "ஒன்றை" -

விட்டு / விற்று 


தேடிக்கொண்டிருக்கிறேன் - என்னை!

அவள் - என்னவள்!

 வள்!

அன்பு செய்தாள் - சேர்த்தே

வம்பும் செய்தாள்!

ரசித்தேன்! அவள் வகுப்பில் -

இல்லையென்றால் தவித்தேன்!

கண்களும் பேசின - அதுவழிவந்த

நீரும் பேசியது!

தீரா அன்பு ஒன்றுணர்ந்தோம் - அவ்வன்பினால்

தீர்க்கமாய் ஒன்றிணைந்தோம்!

சொத்தொன்றுமில்லை - என்னிடம்

அவளைத்தவிர!

அவள் - என்னவள்!

அம்மை

 உன் அம்மையும்

செல்ல மகள் தான்!

கள்ளமில்லா அன்புக்கு

சொந்தக்காரி!

சூடும் தாங்க மாட்டாள்- ஒரு

சுடு சொல்லும் தாங்க மாட்டாள்!

ஆனால்

உனக்காக பெரும்பாடு பட்டு விட்டாள்!


ஒரு நாள் முழுதும்

துடிச்சுத் தான் போனோமடி

- உனைக்கண்ட அந்த நொடி

- அந்த வலியும் தான் கானோமடி!

உன் அழுகுரல் கேட்ட நொடி

உள்ளமெல்லாம் பூரீப்படி!



29 வருடம் புரியவில்லை!

ஓர் இரவில் புரிய வைத்து விட்டாய்

தாய் தந்தை அருமையை!


என் செல்ல மகளே -

உனை எப்படி கொஞ்ச ?


என் பட்டே!

என் முத்தே!

என் அமுதே!

என் வைரமே!



உனை அம்மை என்றழைத்த நொடி!

நீ எதற்காய் என் பக்கம் திரும்பினாயோ?

நீ எதற்காய் எனை கண் திறந்து பார்தாயோ?

ஆனால் உன் பார்வை பட்ட அந்த நொடி!

நான் தகப்பனாய் பிறந்தேனடி!



உன் முகம் கண்டு உன் ஆச்சி தாத்தா பூரித்த போது!

நான் மகனாய் பிறந்ததின் பேறு அடைந்தேனடி!

"அது", எது?

 அது!

எனது!

நான், பல நாள், தூக்கமிழந்தது!

"அது", எது?


என் தூக்கமெல்லாம்

இரவின் தூக்கத்துக்கு பின்னர் தான்!


மூடிய விழிகள் - முடிந்திடா எண்ணங்கள்;

அதிலும் பல வண்ணங்கள்!


கனவா?

வெறியா?

அல்ல - வெறும் எண்ணச் சுருள்களா?


என்றெண்ணி எண்ணியே - 

எண்ணிக்கொண்டிருந்தேன் - கொட்டிய முடிகளை!


மும்முறை தீனியும்

பெயர் சொல்ல ஒரு பணியும்

இருக்கிறது - நிறைவா!


அது தான், என் நிறைவா?


ஆசை, பேராசை - அது நிராசை!


என்னுடையது - ஆசையில் அடங்குவதல்ல;


தூரத்து கடல்!

குளிர் மணல்!

வானத்து வட்ட ஒளி!

மெல்லிசை காற்று!

இவற்றால் ஆனதல்ல - என் அது!


அது, "எது"?


அது, 

கடலலையைப் போல் - ஆர்ப்பரிக்கும் இரைச்சல்!

மனதெல்லாம் ஒரே குமைச்சல்!


எங்கேயும் நகலாமல்

எண்ணத்தினுடே எங்கெங்கோ அலைச்சல்!


நிறைந்திடாத என் நிறைவை

தூக்கி எறிந்தேன் -

அதுவழி வந்திட்ட இழிவால்

தனலாய் எரிந்தேன்!


முற்றும் - 

எரிந்ததாலோ

என்னவோ?


வசையெல்லாம் - இசை ஆயின!


காசின்றி வாங்கிய

கல்லடியிலும்

சங்கதி சத்தமே கேட்டது!



என், "எது" - இதுவாயிருக்குமோ??

இசையாய்  இருக்குமோ?

இரைச்சல் இசையாய், இனிக்குமோ?


ஆர்ப்பரித்த கடல் -

அமைதி கொள்ள ஆரம்பித்தது -

இரைச்சல் இசையால்!