Thursday, October 20, 2022

மகளதிகாரம்



அது மணி - பத்தென்றாலும் 

பதினொன்றானாலும் - நடுநிசி என்றாலும் 

விதி, அவளுக்கு -

ஒன்று தான்!



அலுவல் பணியோ - வெளியூர்

பயணமோ - வீட்டு வேலைகளோ

அது எதுவாகினும் சரி - நான் 

முடித்திடும் வரையில் முழித்திருப்பாள்!



அருகிலேயே இருந்திடல் வேண்டும்!

தட்டி கொடுக்கவும் வேண்டும் - இப்பொழுதெல்லாம் 

தலை கோதிவிடவும் வேண்டும்!

கையணைப்பும் - அதன் 

கதகதப்பும் - தன் குயந்தைகால

கதையும் - கதைத்தால் தான் 

கண் உறங்குவேன் என்கிறாள்!



கொசு கடித்தாலும் - 

குளிர் காற்றானாலும் 

போர்த்தி விடக்கூடாது!



தூங்கும் தொட்டி மீனை - தட்டி 

விட்டதைப் போல - துடுக்கென்று 

வெட்டிக்கொள்வாள்!

எனக்குத்தெரியாதா - போர்த்திக்கொள்ள?

என்ற கோவம் - தெறிக்கும்!



அது - அவளது 

எதிர்கால முடிவுகளுக்கான - சுதந்திரம் 

குறித்த எனக்கான பாடம் என்று - எனை

பக்குவப்படுத்திக் கொள்கிறேன்!



நல் உரக்க நேரத்தில் 

அனிச்சையாய் கால்கள் இரண்டும் 

என் வயிற்றின் மேலே - மெத்தென்ற 

தலையனைப் போல!



இன்னும் எத்தனை நாட்களுக்கு - என்று தெரியாததால் 

இருக்கி அனைத்துக்கொள்கிறேன்!



எத்தனை அசதியானாலும் - இந்த 

ஒற்றை இன்பப்பொதி போதும்!

அத்தனையும் மறக்க!



என்னத்தவம் செய்தனை!



#மகளதிகாரம்