Thursday, November 12, 2015

சகிப்புத்தன்மை!!

சகிப்புத்தன்மை, இன்று தகிக்கும் பிரச்சினை!

இங்கிலாந்து சென்றும் இந்திய பிரதமர் - சகிப்புத்தன்மை பற்றியே முழங்குகிறார். இந்தியாவின் சகிப்புத்தன்மையின், கருத்துசுதந்திரத்தின் அளவீடுகளை உரக்கப் பேசுகிறார்! இந்தியா, அவ்வளவு சகிப்புத்தன்மை அற்ற நாடாக போய்விட்டதா?

உண்மையில் நிலைமை என்னவென்றால் - நம்மால் ஊழலை சகித்துக்கொள்ள முடியும், ஊழல்வாதி மதச்சார்பின்மை பேசினால் சகித்துக்கொள்ள முடியும், பெண்களின் மீதான வன்முறையை சகித்துக்கொள்ள முடியும், புழுத்த அரிசியை ரேசனில் விநியோகித்தால் சகித்துக்கொள்ள முடியும், சாலைகளில் உள்ள பள்ளங்களை சகித்துக்கொள்ள முடியும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை சகித்துக்கொள்ள முடியும், போலிச்சாமியார்களை சகித்துக்கொள்ள முடியும், நடிகர்களுக்காக அடித்துக்கொள்பவர்களை சகித்துக்கொள்ள முடியும் , சாலைகளில் பிச்சை எடுப்பவர்கள், சாக்கடை பக்கத்திலேயே உண்டும் உறங்கியும் வரும் மனிதர்களை பெரும் சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொள்ள முடியும்.....

பிறகென்ன இன்னமும் ஏன், எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மை பற்றி கூக்குரலிடுகின்றன?

மேல் சொன்ன அத்தனை சமூக அவலங்களையும் சகித்துக்கொள்ளும் நம்மால் - பேருந்தில் நம் காலை மற்றொருவர் தெரியாமல் மிதித்துவிட்டால் சகித்துக்கொள்ள முடிவதில்லை! நம் கருத்திற்கு எதிர் கருத்தை ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் - குறைந்தபட்சம் அதை கவனிக்கும் அளவுக்கு கூட நம்மிடையே சகிப்புத்தன்மை இல்லை - உடனே தனி நபர் தாக்குதலில் இறங்கிவிடுகிறோம்! இமாலய ஊழல்களை சகித்துகொண்ட நமக்கு பேருந்தில் நடத்துனர் சில்லறை இல்லை என்ற காரணத்தால் ஒன்றிரண்டு ருபாய் குறைவாய் கொடுத்துவிட்டால் சட்டையை பிடித்து சண்டை போடுகிறோம்!

பொதுவெளியில் தான் இப்படி என்றால் வீட்டிலும் இப்படித்தான்- சாப்பாட்டில் உப்பின் அளவு குறைந்துவிட்டால் உடனே குறைபட்டுக்கொள்வோம், சீக்கிரம் எழுந்திரிக்கட்டும் என்று தந்தை மின்விசிறியை அணைத்துவிட்டால் - உடனே தூக்கத்தை கெடுத்துவிட்டார் அப்பா, என்று அம்மாவிடம் புலம்புவோம், வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் இருக்கும் வேளையில், தொலைக்காட்சியில் எல்லாருக்கும் பிடிக்கும்படியான நிகழ்ச்சியை காணாமல் நமக்கு பிடித்ததை வைத்து அனைவரையும் கடுப்பேத்துவோம்! அதன் பின் நடக்கும் அத்தனையும் மகாபாரதத்தை மிஞ்சிய பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் காட்சிகள்!

என் மீது ஒருவன் புகார் கூறினால் - அந்த புகாருக்கு பதிலளிப்பது பொறுப்பான செயல்! அந்த புகார் தவறானது என்று நீருபித்தால் உன்னதமானது! ஆனால் அந்த புகாரை முன்வைக்கும் அளவுக்கு நீ யோக்கியமானவன் இல்லை, உனக்கு தகுதி இல்லை, ஆகையால் நான் உனக்கு பதிலளிக்க மாட்டேன் என்பது? - கண்டிப்பாய் செய்த தவறை மறைக்கும் பொருட்டு உருவான - செயற்கையான சகிப்புத்தன்மையற்ற செயல்!

அப்படியென்றால், இந்திய திருநாட்டில் சகிப்புத்தன்மை அறவே மறைந்து விட்டதா?

சத்தியமாக இல்லை! சகித்துக்கொள்ள   வேண்டியனவற்றில் சகிப்புத்தன்மையற்றும் - சகிக்கவே கூடாத வெகுண்டெழ வேண்டியனவற்றை சகித்துக்கொண்டும் இருக்கிறோம்! இது இயல்பானதா, என்றால் - ஆம், அறைவேக்காட்டுத்தனமான மேற்கத்திய புரிதலும், நம் கலாச்சாரம் அறியாதலும் கொண்டு வந்த விளைவு! இது ஆபத்தானதா என்றால் - கண்டிப்பாக அபாயகரமானது - நாட்டின் ஒற்றுமைக்கே வேட்டுவைப்பது!

சரி!
சகிப்புத்தன்மையை எவ்வாறு பரப்புவது? நாட்டின் ஒவ்வொரு பெரிய மாற்றங்களும் - எதோ ஒரு சூழ்நிலையில் - "தனிமனிதன்ஒருவனால் அவன் வீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதுவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு - ஒரு களத்தில் பின் நின்று பார்க்கும் போது மிகப்பெரிய மாற்றமாய் தெரியும்! இங்கே பிரச்சினை என்னவென்றால் யார் அந்த ஒரு "தனிமனிதன்" என்பது தான்!

நாம் ஒவ்வொருவரும் ஒன்றை புரிந்துகொள்ளுதல் வேண்டும்! நம் கருத்து எப்பொழுதும் சரியானதாக இருக்க முடியாது! அப்படியே சரியானதாக இருந்தாலும், எல்லா சமயமும் எல்லாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அப்படியென்றால் அந்த இடத்தில் - கருத்துவேறுபாடுகள் எழும், அதை ஆக்கப்பூர்வமான விவாதத்தினால் சரி செய்ய வேண்டுமேயன்றி விதண்டவாததிலும் - வேற்றுமை அரசியலினாலும் அல்ல!

இங்கே நான் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறேன், மிகுந்த பலம்கொண்டவனாக இருக்கிறேன் - ஆதலால் என் கருத்தை அனைவரும் ஏற்கவேண்டுமேன்றால் - உலகில் மனிதனை விட மிருகங்கள் பலமானவை, எண்ணிகையிலும் கூட!

நாம் மனிதத்தை வளர்க்கப்போகிறோமா அல்ல மிருகங்களாய் மக்கப்போகின்றோமா?

சரி, அப்படியென்றால் நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தலில் நடந்தது என்ன?

மாட்டிறைச்சி பற்றிய ஆளும்கட்சியின் செயல்பாடுகளை, வேற்றுமை அரசியலை  சகித்துக்கொள்ளாத நாம், மாடுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளியென நீருபிக்கப்பட்டு தண்டனை பெற்ற - லாலு வெற்றிபெற்றதை சகித்தும், கொண்டாடியும் வருகிறோம் என்றால் இதுவும் ஆபத்தான போக்கு தான்! இதுவும் நாட்டை அழிவுப்பாதைக்குத்தான் இட்டுச்செல்லும்!

ஆனால் , இதை இப்படியாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது!


ஊழலின் இருப்பை ஒரு நல்ல அதிகாரி அழித்துவிடமுடியும் - ஆனாலும் வேற்றுமையின் விதை ஒருமுறை மண்ணில் தூவப்பட்டு விட்டால் அதை வேரோடு அழித்தொழிப்பது என்பது கடினம்! அந்த வகையில் - இந்த ஒரு சார்பு சகிப்புத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே!