Saturday, December 14, 2013

போதை!!!

நகரங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன - பரப்பில், பண புழக்கத்தில், வானளாவிய கட்டிடங்களில் என அனைத்திலும் மிக ஆங்காரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.


எத்தனை எத்தனை மேம்பாலங்கள்? சுரங்கப்பாதைகள்? ரயில் பாதைகள்? மின் பாதைகள்? வின் முட்டும் கட்டிடங்கள்? சற்றேனும் பளபளப்பான சாலைகள்? கழிவு நீர் வடிகால்கள்? இத்தனையும் செம்மையாய் வளர்ந்திட, தொடர்ந்து இயங்கிட ஒரு இயந்திரம் உதவுமானால் - அது பொருளாதாரத்தில் கடைநிலையில் இருக்ககூடிய உழைக்கும் மனிதவர்க்கமே ஆகும்.


இவர்களை பற்றி எவர்க்கும் கவலை இல்லை - ஏன் அவர்களுக்கே கூட!!!


இவர்களில் பலரது இருப்பிடமானது - நகரத்து பாலத்தின் அடியினிலும், புறநகர் காலி இடத்து குடிசையுமே ஆகும். இவர்களில் பெரும்பாலோர் வெளிமாநிலத்து வாசிகள், வயிற்றின் பசி வலி போக்க - வழி தேடி வந்தவர்கள்!


அரசாங்கத்தின் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் எல்லாம் இவர்களுக்கு பொருந்தாது.

எத்தனை பதின் வயது சிறுவர்கள் - வாலிபர்கள் கொடுத்த கூலியை - பெற்றுக்கொண்டு அடிமைகளாய் உழைத்து கொண்டிருக்கின்றனர்.
அனால் இதை எல்லாம் கண்டு அவர்கள் வருந்துகிறார்கள் என்றோ, இல்லை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் என்றோ நாம் நினைத்தோமேயானால் - நம்மை விட ஏமாளிகள் யாருமில்லை.
அவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் - இருப்பதாக தங்களை தாங்களே ஏமாற்றிகொள்கிறார்கள்!! இல்லை, இல்லை - தங்களை தாங்களே நம்ப வைத்து கொள்கிறார்கள்!!
அதற்கான அவர்களின் மந்திர வஸ்து தான் - அரசாங்க அனுமதியோடு வெளிவந்துகொண்டிருக்கும் போதை வஸ்துகள்!
பேருந்தில், நகரத்து ரயில்களில் கூட்டமாய் அழுக்குச்சட்டைகளோடும் சீனா மொபைல் அதிரடிகளோடும் - வாய் நிறைய பாண் பராக் சிரிப்போடும் - நம்மை ஒதுங்க வைப்பவர்கள் தான் - நாட்டின் பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சிகளில் பங்கெடுக்கின்றனர்!!



இவர்களின் வாழ்க்கை நிலைபற்றி நாம் என்றும் யோசித்தது இல்லை - அவர்களையும் யோசிக்க விடுவதில்லை!
இரண்டு ரூபாய் பாக்கெட்டுகளில் ஒருவனை அடிமையாய் நடத்துவர்களை
நாம் எதிர்க்கபோவதும் இல்லை - இவர்கள் நிலைகண்டு வருந்துவதும் இல்லை!!!
 



இதையெல்லாம் யோசித்து தடை செய்திட வேண்டிய அரசாங்கமோ, வாய்மூடி கை விரித்து - விற்பனை அங்காடிகளை திறந்துவைத்துகொண்டிருக்கிறது.

நாட்டில் இப்போது - அதிகமாகிக்கொண்டிருக்கும் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவற்றில் அடிமட்டத்து போதைவெறி அடிமைகளின் பங்கெடுப்பே அதிகம். இவர்கள் நோக்கமற்று திரிகின்றனர் - இந்தியாவின் ஒரு சந்ததியையே போதைக்கு அடிமையாக்கிவிட்ட பெருமை - சமகாலத்து அரசியல்கட்சிகளையும் ஆட்சியாளர்களையுமே சேரும்.
அவர்களுக்கு என்ன, அவர்கள் அடிக்கும் கொள்ளையை எதிர்த்து எவனும் சத்தமிட்டிடக்கூடாது - அதற்க்கான வழிகளை கச்சிதமாய் செய்துவருகின்றனர்!!


பாவம் செய்தது மக்கள் தான்!! ஒருபக்கம் இலவசங்களை காட்டி அரசாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள் -  மறுபக்கம் போதைக்கு அடிமையாகிவிட்டவர்களின் உழைப்பை - முதலாளிகள் கொள்ளையடிக்கின்றார்கள்!
பிரச்சினைகளின் வேரினை கண்டறியாமல் - சட்டத்தை கடுமையாக்குவதும் - தூக்கு தண்டனைகளும் கண்டிப்பாய் பலன் தந்திராது!!
ஒரு பெண்ணின் துவாரத்தில் கம்பியை சொருகும் ஒருவன் எவ்வளவு - மிருகத்தன்மையும் - வெறியும் கொண்டவனாக இருந்திருப்பான்? அவன் எவ்வளவு பெரிய குற்றவாளியோ - அதே போல் அவன் அப்படி செய்திட தூண்டிய - போதையை விற்ற அரசாங்கமும் - ஆட்சியாளர்களும், கொடுங்குற்றவாளிகள்!
இத்தனை கொடியவை நிகழ்த்தும் போதை வஸ்துகளை எதிர்க்க வேண்டிய படித்த இளைஞர்களும் - அறிவாளர்களுமே போதைக்கு அடிமையாகித்திரிவது தான் - காலத்தின் சோகம்!!

 

கொஞ்சமேனும் யோசித்துப்பாருங்கள் - இந்த அடித்தட்டுமக்களுக்கு மனதில் கொஞ்சமேனும் வாழ்க்கை குறித்த ஏக்கம் இருக்காதா? இப்படி சிறுவயதிலேயே போதை வஸ்துகளுக்கு அடிமையாகிவிட்டவர்களின் உடல் நலன் எப்படி இருக்கும்? அவர்களை யார் திருமணம் செய்ய முன் வருவர்? அவர்களுக்கு மணமானால் - அவர்கள் வாழ்க்கை நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் குழந்தைகளின் நிலை என்ன? ஏழையின் பிள்ளையாய் பிறந்தபாவத்துக்கு - அவர்களும் இந்த அசிங்கதுக்கு உள்ளேயே வாழ்ந்திட வேண்டுமா?

ஒருநாடு வளர்ந்த நாடாக, கட்டிடங்களின் வளர்ச்சி மட்டுமே போதாது - அந்நாட்டு மக்களின் பொருளாதார நிலையும் - அறிவு நிலையும்- உடல் நிலையும் வளர்ந்திருக்க வேண்டும்!!
அனால் இங்கே குடித்து குடித்தே நெஞ்சை ஓட்டையாக்கி கொண்டவர்கள் ஏராளம்!

இத்தனை தீங்கு விளைவிக்கும் - போதை பொருள்களை தடை செய்திடாமல் - படங்களை போட்டு படம் காட்டும் அரசாங்கத்தை நாம் என்னவென்று சொல்வது??
இத்தனை சமூக அவலங்களுக்கும் காரணம்,  படித்திருந்தும் - இத்தனை அவலங்களை உணர்ந்திருந்தும் - எதிர்க்காமல், நமக்கு எந்த பாதிப்பும் இல்லை - நாம் ஏன் வீணாக ஊர் பிரச்சினையில் மூக்கை நூலைக்க வேண்டும், என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் - நல்ல உள்ளங்களான நாமும் ஒரு காரனம என்றால் - மறுக்கமுடியாது!!

சரி என்ன தான் செய்வது? உணர்ச்சி போங்க ஏதோ கிறுக்கியாகிவிட்டது - என் பணி முடிந்துவிட்டது என்று ஒதுங்கப்போவதில்லை நான் - கண்டிப்பாய் என்னால் முடிந்திடும் பொழுது - என் வாழ்க்கைக்கு பிரச்சினை வராத அளவுக்கு - நான் இயன்ற அளவு கண்டிப்பாய் பிரச்சாரம் செய்வேன்!
சாமானியனான நான் - இதை விட வேறு என்ன செய்திட முடியும்? யோசித்திடுங்கள் - முடிந்தால் நம்மால் பின்பற்ற இயலும் வழியினை கூறிடுங்கள்...