Saturday, January 12, 2013

எம்நன்றிகள் காணிக்கை!

உயிர் படைத்தது பிரம்மன் - இங்கே
உயிர்களுக்கு உணவு படைப்பவன் - உழவன்!

நவீனமாம், அறிவியலாம் - உரம்
வீசினான் மண்னுக்கு - அவன்
கண்னுக்கு தண்ணி வைத்து - மாயமாய்
அழித்தது விவசாயத்தை - விஷ சாயமாய்!

ஒரு நாடு!
ஒரே சட்டம!!
உழவுக்கு அல்ல - இந்நாட்டில்??

தண்ணிக்கு தான் எத்தனை சண்டை?

அடக்க வேண்டிய தண்ணி(TASMAC) - ஆறாக
ஓடுகிறது! ஆர்ப்பரிக்க வேண்டிய ஆறு
குட்டையாய் தேய்கிறது!

பயிரிட்டவன் பட்டினி கிடக்க -பங்குச்சந்தையில்
விற்றவன் - பகட்டாய் பவனி வருகிறான்!

அரை சான் உறுப்பு அடங்க -
ஏக்கரா வரப்பு விற்கின்றான் - பின்
திக்கு திசையின்றி நிற்கின்றான்!

அறுவடை இடம்!
ஆறு மாடிகட்டடம்!
பகட்டாய் தான் இருக்கும் -
பஞ்சம் வரும் வரையிலும்!

கதிரவன் நித்தம் வருகிறான் - கதிரருப்பவன்
சத்தமின்றி கரைகிறான்!

பங்குச்சந்தை ஏற்றம் -
சங்குச்சந்தையின் லாபம்!

தானிய இறக்குமதி - கையேந்தலின்
துவக்கம் என்பதே நியதி!

நாட்டில் அரசியலும் - அன்னமிடலும்
தகிடுதத்தம் ஆனது - இளைஞரின்மையால்!

விளைவு - நாட்டின் வளர்ச்சி
வரைப்படத்தில் பெரும் வளைவு!

அறிஞர்களே!
அதிகாரிகளே!
அரசியல் கெட்டிருக்கலாம் -
அரசும் கூட கெட்டிருக்கலாம் - ஆனால் நீங்கள்
மனசு வைத்தால் - விவசாயம் செழிக்கலாம்!

பரப்பிடுங்கள் இயற்கை உரங்களை - அழித்திடுங்கள்
அபாய செயற்கை கரங்களை!

அறிவுசார் விவாதங்கள் நடந்திரட்டும்!
உழவுக்கு புதுத்திட்டங்கள் வந்திரட்டும்!

மானியங்கள் சென்று சேர்ந்திடட்டும் -
மானுட பிரம்மன் அன்னம் படைக்கட்டும்!

உழவர்சந்தை பெருகட்டும் - உழவர்
வாழ்வு தழைக்கட்டும்!

நாடு இஞ்சினியர்கள் கண்டது போதும் -
எஞ்சி நிற்போராவது காடு காத்திடட்டும்!

படிப்போம் விவசாயத்தை -
படைப்போம் பல தானியத்தை!

எத்தனை எத்தனை காணிக்கை -
இத்தனை நாள்களில் இறைவனுக்கு!

இந்த ஒற்றை நாளில் - நாட்டின் காணி
பிரம்மனுக்கு மரியாதை செலுத்துவோம்!


காணி காத்தோருக்கு - எம்நன்றிகள் காணிக்கை!





2 comments: